அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் முதியோர் இல்லம் ஒன்றின் தற்காலிக சவக்கிடங்கில் குவிக்கப்பட்டிருந்த 17 சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த 17 பேரும் கொரோனா பாதிப்பால் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
நியூ ஜெர்சியில் உள்ள ஆண்டோவர் நகர பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த பயங்கரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆண்டோவர் நகரில் செயல்படும் மாகாணத்தின் மிகப்பெரிய முதியோர் இல்லத்தின் ஒரு பகுதியில் இந்த சடலங்களை குவித்து வைத்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நான்கு சடலங்கள் மட்டுமே பாதுகாக்க பயன்படுத்தப்படும் அறையில், மொத்தம் 17 சடலங்கள் குவிக்கப்பட்டிருந்தது.
குறித்த முதியோர் இல்லத்தில் மட்டும் கடந்த சில வாரங்களில் சுமார் 68 பேர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மரணமடைந்த 68 பேரில் இருவர் செவிலியர்கள் எனவும் கூறப்படுகிறது. அந்த இல்லத்தில் மேலும் 76 பேர் கொரோனா பாதிப்பால் மிக மோசமான நிலையில் உள்ளனர்.
இதில் 41 பேர் காப்பக ஊழியர்கள் என கூறப்படுகிறது. தற்போது அந்த 17 சடலங்களில் 13 உடல்களை அருகாமையில் உள்ள நகருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரே அறையில் 17 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இந்த விவகாரமானது, குறித்த இல்லத்தில் உற்றார் உறவினர்களை தங்க வைத்திருக்கும் பலருக்கும் கடும் வேதனையை அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.