போலி பெயருடன் வாழ்வோருக்கு சிக்கலை ஏற்படுத்தும் சட்ட வரைவு ஒன்று ஜேர்மனியில் உருவாக்கப்பட்டுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கள் அடையாளம் குறித்த பொய்யான தகவல்களை தருவதை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, ஜேர்மன் அரசு வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறுவதை கடினமாக்கத் திட்டமிட்டுள்ளது.
போலியான பெயருடன் அல்லது தங்களைக் குறித்த பொய்யான தகவல்களை அளித்து ஜேர்மனியில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து, சட்ட வரைவு ஒன்றை உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இதுவரை, எட்டு ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள் என கருதப்பட்டுவந்தனர்.
ஆனால், இந்த புதிய சட்டத்தின்படி, போலியான பெயருடன் ஜேர்மனியில் வாழ்ந்த காலகட்டம் குடியுரிமை பெறுவதற்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இரண்டாவதாக, வாழிட உரிமம் பெறுவதும் பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது. புதிய சட்டத்தின்படி, போலிப் பெயருடன் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு நிரந்தர வாழிட உரிமம் மறுக்கப்படும்.
அத்துடன் வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கும் சிக்கல் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது, அவர்கள் ஜேர்மனியில் பிறந்தவர்களாக இருந்தாலும் கூட… இதற்கு முன், ஜேர்மானியரல்லாத பெற்றோருக்கு (இரண்டு பெற்றோரும் ஜேர்மானியரல்லாதவர்கள்) ஜேர்மனியில் பிறந்த குழந்தைகள், அவர்களது பெற்றோரில் ஒருவர் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருந்தால், அந்த குழந்தைகள் ஜேர்மன் குடிமக்களாவார்கள்.
புதிய சட்டங்களின்படி, குழந்தையின் பெற்றோர் தங்கள் அடையாளம் மற்றும் நாடு ஆகியவை குறித்த உண்மையான தகவல்களை நிரூபித்தால் மட்டுமே அந்த குழந்தைகளுக்கு ஜேர்மன் குடியுரிமை வழங்கப்படும்.
உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்த சட்ட வரைவு, தற்போது மற்ற அமைச்சகங்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களும் அதற்கு ஒப்புதலளித்தால் அது நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.