பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 847 பேர் உயிரிழந்துள்ளதால், நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 14,000-ஐ தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 847 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மருத்துவமனைகளில் மட்டும் என்பதால், பராமரிப்பு இல்லங்கள், முதியோர் காப்பகம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கையை சேர்த்தால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.
அதுமட்டுமின்றி, நாட்டில் கொரோனா வைரஸிற்கான முதல் அலை முடிவதற்குள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ சந்திக்க நேரிடும் என்று முன்னணி பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுடன் ஒப்பிடும் போது, இது குறைவு தான், நேற்று நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 861-ஆகவும், புதன் கிழமை 761-ஆகவும் இருந்தது. இதன் மூலம் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,576-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால், வீட்டில் இருந்து வெளியில் வரும் மக்கள் எதற்கெல்லாம் அனுமதிக்கப்படுவார்கள்? எதற்கெல்லாம் அனுமதிக் கிடையாது என்ற வழிகாட்டுதல்களை பொலிசார் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி, வீட்டை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்காக ஷாப்பிங் செய்யும் போது தேவையான ஆல்கஹால் மற்றும் பிற ஆடம்பர பொருட்களை வாங்கவும் முடியும் என்று அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பூங்காக்களில் நீண்ட நேரம் பொது பெஞ்சில் உட்கார்ந்துகொள்வது அனுமதிக்கப்படாது. அதே நேரத்தில் சுருக்கமான உடற்பயிற்சியைக் கொண்ட நீண்ட காலத்திற்கு வாகனம் ஓட்டுவதும் அனுமதிக்கப்படாது.