பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 57 வயது மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதால், இவர் இந்த தொற்று நோயினால் இறந்த 50-வது என்.எச்.எஸ் ஊழியராக கருதப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் மக்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன.
இதற்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் 57 வயதான Krishan Arora என்ற மருத்துவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவால் உயிரிழந்த 50-வது என்.எச்.எஸ் ஊழியர் இவர் என்று கருதப்படுகிறது.
தென்மேற்கு லண்டனின் Croydon-னில் உள்ள Violet Lane மருத்துவ பயிற்சியில் மூத்த பங்காளராக இவர் இருந்தார். 27 ஆண்டுகளாக குடும்ப மருத்துவராக இருந்தார்.
அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க, அவர் அறிகுறிகளை பெற்ற பின்னர் வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து கடந்த 15-ஆம் திகதி உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் போது பணியில் இல்லை என்று கூறப்படுகிறது.
கொரோனாவால் உயிரிழந்த Krishan Arora-வுக்கு குழந்தைகள் மற்றும் மனைவி உள்ளனர்.
இவரின் மரணம் குறித்து சக மருத்துவர் Agnelo Fernandes கூறுகையில், Krishan Arora-வின் மரணத்தால் நாங்கள் அனைவரும் மிகுந்த வருத்தப்படுகிறோம். அவர் தனது நோயாளிகளை பராமரிப்பதிலும், அவர்களுக்கு சேவையாற்றுவதிலும் அயராது உழைத்தார்.
எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த அனுதாபங்களும் இந்த கடினமான நேரத்தில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருங்கிய சகாக்களுடன் உள்ளதாக குறிப்பிட்டார்.