இத்தாலியின் மிலன் நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய முதியோர் காப்பகத்தில் 190 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மிலன் நகரில் அமைந்துள்ள Pio Albergo Trivulzio என்ற காப்பகத்திலேயே 190 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
ஆயிரம் பேர்கள் வரை வசிக்கும் இந்த காப்பகத்தின் தரவுகளை புதனன்று கைப்பற்றியுள்ள பொலிசார்,
ஊழியர்களின் அலட்சியம் காரணமாக மரணங்கள் ஏற்பட்டதா என்பதை விசாரிக்க உள்ளனர்.
Pio Albergo Trivulzio காப்பகத்தில் இருந்து வெளியான காட்சிகள் இத்தாலி முழுவதும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியதுடன், நாட்டின் மொத்த ஊடகங்களும் இது படுகொலை என்பதில் சந்தேகம் இல்லை என தலைப்பிட்டன.
இதனிடையே பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் காப்பகத்தின் மேலாளர் விசாரணையில் உள்ளார்.
கொரோனா பரவல் துவக்க நாட்களில், காப்பகத்தில் உள்ள ஊழியர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதும் முன்னெடுக்க வேண்டாம் எனவும், அது முதியவர்களை மேலும் அச்சுறத்துக்கு உள்ளாக்கும் என தடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்ச் 17 ஆம் திகதி, மிலன் மருத்துவமனைகளில் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை, குறித்த காப்பகத்திற்கு இடம் மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்தே குறித்த காப்பகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டதாகவும் ஒரு கருத்து கூறப்படுகிறது.
ஆனால், அந்த காப்பகமானது சமீப நாட்களாக மேலாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என அதே காப்பகத்தில் வசிக்கும் 76 வயது தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே லொம்பார்டி பிராந்தியத்தில் உள்ள முதியோர் காப்பகங்களில் மட்டும் சுமார் 1,822 பேர் கொரோனாவுக்கு பலியானதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.