ஒத்திவைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் நாளை முக்கிய மாநாட்டை கூட்டவுள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு பொலிஸ் மற்றும் முப்படை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலக அதிகாரிகளும் பொதுநிர்வாக சேவை உயரதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதால் இதற்கு எத்தகைய மாற்று நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தினகரனுக்கு தெரிவித்தார்.
தேர்தலை விரைவில் நடத்துவதாக இருந்தால் அதன் செலவினம் மூன்று மடங்காக அதிகரிக்குமென அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஏற்கனவே பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 750 கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால். இந்தத் தொகை 2,500 கோடி ரூபாயையும் தாண்டலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
நாளை நடைபெறும் மாநாட்டின்போது ஆராயப்படும் விடயங்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தலை உடனடியாக நடத்துவது அசௌகரியமான காரியங்களை சுட்டிக்காட்டி இருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், இதனை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த மாநாட்டை கூட்டுவதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கிருக்கும் அதிகாரத்தின் கீழ் மார்ச் மாதம் முதலாம் திகதி கலைக்கப்பட்ட பாராளுமன்றம் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கான அறிவித்தல் வர்த்தமானி மூலம் பிரகடனபடுத்தப்பட்டது.
என்றாலும் கூட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட இறுதி நாளன்று நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்தோம். ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்குமிடையில் மீண்டும் கூடி இறுதி முடிவொன்றை எடுக்க எண்ணி இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம்.
ஆனால் தற்போதைய நிலையில் தேர்தலை இன்னும் மூன்று மாதங்களில் கூட நடத்த முடியுமா? என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவுவதால் சுதந்திரமாக மக்களால் வாக்களிக்க முடியுமா? என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.
அதேசமயம் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் நெருக்கடி நிலை காணப்படுகிறது. வாக்களிப்பு நிலையங்களில் மக்களை திரட்டுவதிலும் அதிகாரிகள் கடமைகளை முன்னெடுப்பதிலும் நெருக்கடியான நிலை அதிகமாக காணப்படுவதால் இதற்கு மாற்றுத் தீர்வை காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு இந்த மாநாட்டை கூட இருப்பதாகவும் இந்த மாநாட்டில் நாங்கள் கலந்துரையாட உள்ள விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தி அவருடைய கருத்தையும் கேட்டறிய தீர்மானித்திருக்கிறேன்.
அடுத்த கட்டமாக கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களுடன் இவ் விடயமாக கலந்துரையாட இருக்கின்றோம். இந்தத் தேர்தல் நாட்டின் முக்கியமான தேர்தலாகும்.
இந்த தேர்தலை நாம் எப்படி நடத்தி முடிப்பது என்பது தொடர்பில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கின்றது. பாராளுமன்ற தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படாவிட்டால் அதற்குரிய மாற்று நடவடிக்கை என்ன?
அது குறித்து சட்டத்தில் இதுவரையில் எத்தகைய வியாக்கியானம் காணப்படாமையினால் புதிய வியாக்கியானங்களை உள்ளடக்கிய சட்டத்திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதனை எவ்வாறு செய்வது என்பது குறித்தும் நாங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாட இருக்கின்றோம்.
தேர்தலை இரண்டு மூன்று கட்டங்களாக நடத்துவதற்குரிய வியாக்கியானம் எதுவும் அரசியலமைப்பில் காணப்படவில்லை.
என்றாலும் கூட ஜனாதிபதியினபல் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்போது ஒன்றுக்கு மேற்பட்ட திகதிகளை அறிவித்திருந்தால் அதனை கவனத்தில் எடுத்து செயல்பட்டிருக்க முடியும். ஆனால் அவர் ஒரே திகதியை தான் அறிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில் திகதிகளில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அது குறித்து ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோர வேண்டும். அல்லது பாராளுமன்றத்தை கூட்டி சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதற்குரிய அதிகாரம் ஜனாதிபதியையே சார்ந்திருக்கின்றது.
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எவ்வளவு காலத்துக்கு செல்லுபடியாகும் என்று அவரிடம் கேட்டபோது அப்படியொரு வியாக்கியானமும் யாப்பில் கிடையாது.
பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி ஜூன் மாதம் 02 ஆம் திகதியுடன் காலாவதி ஆவதால் அடுத்தகட்டமாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாட வேண்டியுள்ளது என்றாலும் ஒரு வேட்புமனுவும் இரத்துச் செய்யப்பட முடியாது.
அப்படி செய்ய வேண்டுமாக இருந்தால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஏற்படக்கூடிய செலவினங்கள் பற்றி முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் ஒரு அளவுக்கு முடங்கிப் போயுள்ளது. இந்த நிலையில் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட 750 கோடி ரூபா மூன்று மடங்காக அதிகரிக்கும் நிலையே காணப்படுகின்றது.
இவ்வளவுக்கும் மத்தியிலும் தேர்தலை நடத்துவதாக இருந்தால் செலவினம் மூன்று மடங்காக அதிகரிக்கும். எப்படியும் 2,500 கோடி ரூபாயை தாண்டும் என்று நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தேர்தல் செயலகம் உரிய தேர்தல் திகதியொன்றை ஜனாதிபதி அறிவித்தால் அதற்குரிய சாத்தியக்கூறுகள் உச்ச நீதிமன்றத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தபட்டால்.
தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெறாமல் திடுதிப்பென்று தேர்தலை நடத்துவது சாத்தியமான ஒன்றல்ல.
நாங்கள் நாளைய கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தெளிவு படுத்துவோம் அவர்களுடன் எட்டப்படக் கூடிய ஆலோசனைகள், அறிவுறுத்தல்களை பெற்றுக் கொண்டு அதனை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து அவரது முடிவை கோருவோம்.
அதன் பின்னரே எமது செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதை எம்மால் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.