பிரித்தானியாவில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை மோசமாகி வருவதால், தங்கள் உயிரைப் பாதுகாக்க கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை நிறுத்த நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
துருக்கியில் இருந்து தருவிக்கப்படுவதாக இருந்த 400,000 பாதுகாப்பு உடைகள் தாமதாகும் சூழலில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை முன்னெடுக்கும் பல மருத்துவமனைகளும் செய்வதறியாது தவித்துப் போயுள்ளன.
இதே சூழல் நீடிக்கும் எனில் மருத்துவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம் அல்லது நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் கைவிடலாம் என மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கொரோனா தொடர்பில் முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவ ஊழியர்களை அரசு ஆபத்தில் தள்ளிவிட்டுள்ளது என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்,
அரசாங்கம் இதுவரை கொரோனாவின் தாக்கம் தொடர்பில் புரிந்துகொள்ள தவறிவிட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இதனிடையே, சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், மருத்துவ கவுன்கள் சில நாட்களில் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகலாம் என வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டார்.
தற்போது துருக்கியில் இருந்து தருவிக்கப்படும் மருத்துவ உபகரணங்கள் காலதாமதம் ஏற்படுவதால், சுமார் 24 மணி நேரத்திற்கு பிரித்தானியாவில் மருத்துவ சேவை ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாகவே இதுவரை 80 NHS ஊழியர்கள் மரணமடைந்துள்ளனர் என கூறும் சுகாதார அமைப்புகள்,
தற்போதைய சூழலில் நாள் ஒன்றிற்கு 150,000 மருத்துவ கவுன்கள் தேவை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 596 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16,060 என பதிவாகியுள்ள நிலையில், புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 5,850 என தெரியவந்துள்ளது.