கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் விலங்குகளுக்கு அளித்து முதல்கட்ட வெற்றி பெற்றுள்ள பிரித்தானிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், அடுத்ததாக மனிதர்களிடம் அதை பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே அதன் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வு என்று உலக அளவில் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அனைத்து நாடுகளும் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக மிகத்தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றன.
சீனாவும், அமெரிக்காவும் ஏற்கனவே மனிதர்களிடம் தங்களுடைய சோதனையை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் முதல்கட்டமாக தடுப்பு மருந்து ஒன்றை தயாரித்துள்ளனர்.
இந்த மருந்து ஏற்கனவே ஆய்வகத்தில் வளர்க்கப்படும் விலங்குகளின் உடலில் செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து, நோய் பாதித்த மனிதர்களிடம் அல்லது தன்னார்வலர்களிடம் இதை செலுத்தி சோதனை செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
ஓரிரு நாட்களில் இந்த சோதனை தொடங்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த வாரம் ஒரு தடுப்பூசியின் மனித சோதனைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர், ஆனால் இது செப்டம்பர் மாத தொடக்கத்தில் தான் செயல்படுகிறதா என்பதற்கான முடிவுகளைக் கொண்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
இந்த சோதனை வெற்றி பெற்றால், உடனடியாக அந்த மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரித்தானிய அரசு, நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகர் பட்ரிக் வலன்ஸ், துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜோனதான் வான்டேம் தலைமையில் பணிக்குழுவை அமைத்துள்ளது.
மேலும் இது தொடர்பில் தலைமை அறிவியல் ஆலோசகரான பட்ரிக் தெரிவிக்கையில்,
ஒரு தடுப்பூசி வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், அது பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த அதிக நேரம் ஆகக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
புதிய தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதற்கான உண்மையான முடிவை எதிர்பார்க்க நீண்ட காலம் எடுக்கும், என்று அவர் நேற்று கூறினார்.