லண்டனில் சூப்பர் மார்கெட்டில் பணிபுரிந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
தெற்கு லண்டனின் Gipsy Hill-ல் உள்ள FreshGoவில் குமார் என்பவர் பணிபுரிந்தார்.
இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார்.
அவருடன் அதே கடையில் பணிபுரிந்த இன்னொரு ஊழியருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் லண்டன் மருத்துவமனையில் அதை எதிர்த்து போராடி வருகிறார்.
ஏற்கனவே லண்டனில் கடை வைத்திருந்த ராஜ் அகர்வால் என்பவர் சமீபத்தில் தான் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
தற்போது குமாரும் உயிரிழந்துள்ள நிலையில் கடைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் சூப்பர் மார்கெட்டில் பணிபுரிபவர்களிடம் கொரோனா அச்சம் அதிகரித்துள்ளது. குமார் பணிபுரிந்த கடையில் சரியான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என அருகில் வசிக்கும் மக்கள் கூறுகிறார்கள்.
அதாவது ஒரு சமயத்தில் கடைக்குள் ஒரு வாடிக்கையாளர் வந்தால் இன்னொரு வாடிக்கையாளர் வெளியேற வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை என தெரிகிறது.
மேலும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், குறைந்த அளவிலேயே பாதுகாப்பு கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதனிடையில் JustGiving இணையதளம் மூலம் குமார் குடும்பத்தாருக்கு கிட்டத்தட்ட £2,000 வரை நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதன் அமைப்பாளர் Siobhann Carolan கூறுகையில், குமார் பல ஆண்டுகளாக FreshGoவில் அயராது உழைத்தார். அவர் அனைத்து வாடிக்கையாளர்களாலும் விரும்பப்பட்டார்.
வசூலாகும் பணம் குமார் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளார்.