கொரோனா வைரஸை தனது அரசாங்கம் கையாண்டது தொடர்பான விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை கொரோனாவால் 17,337 பேர் பலியாகியுள்ளனர், 1,29,044 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.
பிரித்தானியாவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட 41% அதிகம் என தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தின.
இந்நிலையில், எதிர்க்கட்சியான லிபரல் டெமக்ராட்டுகளின் செயல் தலைவர் எட் டேவி, தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.
இறப்பு தரவு, வரையறுக்கப்பட்ட சோதனை அல்லது மருத்துவமனைகளுக்கான உபகரணங்கள் பற்றாக்குறை ஆகியவற்றை குறித்த முழுமையாக விளக்கமளிக்கத் தவறியதால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அரசாங்கத்தின் மெத்தனமான நடவடிக்கை ஆகியவற்றில் உண்மையை கண்டறிவதற்கும், அதிகரித்து வரும் தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்க போரிஸ் ஜான்சனுக்கு வாய்ப்பளிப்பதற்கும், விசாரணைக்கு சாத்தியமான பலமான அதிகாரங்கள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.