கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது தாம் மரணத்தை நேரில் பார்த்ததாக பிரித்தானிய தாயார் ஒருவர் தமது அனுபவத்தை வெளியிட்டுள்ளார்.
15 வயது இளைஞருக்கு தாயாரான எலிசபெத், தமது குடியிருப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் சென்று திரும்பிய பின்னர் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
கொரோனாவின் ஒவ்வொரு அறிகுறியும் தம்மை மிகவும் கொடூரமாக தாக்கியதாக கூறும் எலிசபெத்,
உடல் நடுக்கத்தில் இருந்து மீண்ட சில மணி நேரத்தில் அனலில் குதித்தது போன்று உடல் எங்கும் கொதித்து என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தாங்க முடியாத தலைவலி. கூடவே வாந்தியும் ஏற்பட்டது என கூறும் அவர், வியர்வையால் உடல் முழுவதும் தொப்பலாக நனைந்து கொண்டே இருந்தது என்றார்.
சில நாட்கள் படுத்த படுக்கையாக நினைவு திரும்புவதும் மறைவதுமாக அவஸ்தைக்கு உள்ளான தமக்கு பின்னர் மூச்சு விடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது என்றும்,
தமது அவஸ்தை கண்டு பொறுக்க முடியாத தமது மகனே 111 இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவித்ததை நினைவு கூர்ந்தார்.
ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், மருத்துவரை காணவும் முதற்கட்ட நடவடிக்கை முடியவும் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார்.
பின்னர் கொரோனாவுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பதாகவும், அதனால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்வதாகவும் நர்ஸ் ஒருவர் கூறினார்.
முதல் சில நாட்கள் தமக்கு எதுவும் நினைவில் இல்லை என கூறும் எலிசபெத், தாம் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தேன் என்பது மட்டும் உறுதி என்றார்.
ஆனால் அங்குள்ள பல செவிலியர்களும் தொடர்ந்து 12 மணி நேர ஓய்வில்லாத உழைப்பில் மிகவும் களைத்துப்போய் காணப்பட்டதாக எலிசபெத் நினைவு கூர்ந்துள்ளார்.
நான்கு படுக்கைகள் கொண்ட அறையில், தம்முடன் சிகிச்சை பெற்றுவந்த 3 பெண்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததை நேரில் பார்த்ததாக கூறும் எலிசபெத்,
மரணத்தின் விளிம்பிற்கு சென்று போராடி திரும்பியவர்களில் தாமும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.