கடற்படையின் பிரதான முகாம்களில் ஒன்றான வெலிசறை முகாமில் 65 கடற்படை வீரர்கள், கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று மாலை வரையில் வெளியான பி.சி.ஆர். பரிசோதனைகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இரு நாட்களுக்கு முன்னர் பொலன்னறுவை – புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த கடற்படை இலத்திரணியல் பிரிவில் கடமையாற்றும் வீரர் ஒருவர், விடுமுறைக்காக தனது இருப்பிடம் திரும்பியிருந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து குருணாகல் – வாரியப்பொல, பண்டுவஸ்னுவர பகுதியை சேர்ந்த வெலிசறை கடற்படை முகாமில் சேவையாற்றும் மற்றொருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்தது.
இந் நிலையில் வெலிசறை கடற்படை முகாமில் குறித்த இரு கடற்படை வீரர்களுடனும் தொடர்புகளை பேணிய அனைவரும் பி.சி.ஆர். எனும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந் நிலையில் முகாமுக்குள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டோரில் நேற்றைய தினம் 28 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்த நிலையில் இன்று மேலும் 30 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அத்துடன் இன்று மாலை குருணாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பொல்கஹவலை, மற்றும் அலவ்வ பகுதிகளைச் சேர்ந்த வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் இரு கடற்படை வீரர்களுக்கும் கொரோனா இருப்பது உருதி செய்யப்பட்டதாக குருணாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கெந்தன்கமுவ தெரிவித்தார்.
இந் நிலையில் வெலிசறை முகாமில் இருந்து விடுமுறையில் சென்றிருந்த இரத்தினபுரி – ஹிந்தில்லகந்த பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவரும் இன்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனைவிட பதுளை – கிராந்துருகோட்டே பகுதியைச் சேர்ந்த விடுமுறையில் இருந்த கடற்படை வீரர் ஒருவர் பதுளை வைத்தியசாலையிலும் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த வீரர் ஒருவர் கண்டி வைத்தியசாலையிலும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி இதுவரையில் வெலிசறை கடற்படை முகாமில் சேவையாற்றும் 65 கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எப்படி கொரோனா வைரஸ் தொற்றியது என்பது தொடர்பில் கடற்படை மற்றும் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில், ஜா எல – சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான தொற்றாளர்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளின் போதே அந்த தொற்று ஒரு வீரருக்கு ஏற்பட்டு அதிலிருந்து ஏனையோருக்கு பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, கண்டி மற்றும் குருணாகலில் கண்டறியப்பட்ட இரு கடற்படை வீரர்கள் தவிர ஏனைய 58 தொற்றாளார்களான வீரர்களுக்கும் கொரோனா தொற்று குறித்த எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் கொமாண்டர் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.