வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான இலங்கநாதன் செந்தூரனைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, தொலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டைமானாறு இந்து மயானத்துக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் குறித்து வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை, பிரதேச சபை உறுப்பினரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தொண்டைமானாறு மயிலதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு 7.30 மணியளவில் அவதானித்துள்ளனர்.
இதையடுத்து அதுதொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கினர்.
இந்நிலையில், இன்றிரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.
அதன் பின்னர் அவரது மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட (சுவிட்ஸ் ஒவ்) கைத்தொலைபேசி, முகக்கவசம், தலைக்கவசம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் செந்தூரனின் குடும்பத்தாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செந்தூரனுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்று உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொரோனாவால் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.