கடந்த ஆண்டில் நிறைவடைந்த கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை வெளியிடும் நடவடிக்கையில் இறுதி கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெறுபேறுகளை பாடசாலைகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது.
எனவே, குறித்த பெறுபேறுகளை இணையதளத்தின் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பெறுபேற்று சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு வலய மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்காக கடவுச்சொல் மற்றும் பயனருக்கான பெயர் ஆகியன வழங்கப்படவுள்ளது.
அதேநேரம், விண்ணப்பதாரிகள் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்பதுடன், தற்காலிகமான பெறுபேற்று பத்திரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் சுகாதார நடைமுறையுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றதுடன் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது