கொரோனா பிரச்சனையிலும், பாகிஸ்தான் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பாகிஸ்தான் நாட்டில் 12ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 250பேர் பலியாகியுள்ளனர்.
எனவே அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு ஒருபுறமிருக்க அந்நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நேற்று கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி சோதித்தது.
அரேபிய கடல் பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் அர்ஷித் ஜாவத் கூறும்போது “போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் கடலில் வைக்கப்பட்டிருந்த இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் கடற்படை தளபதி கூறும்போது “இந்த ஏவுகணை சோதனை பாகிஸ்தான் கடற்படையின் செயல்பாட்டு திறன் மற்றும் ராணுவ தயார் நிலைக்கு ஒரு சான்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகமே கொரோனா பிடியில் சிக்கி தவித்து வரும் இந்த சூழலில், பாகிஸ்தானின் இந்த செய்பாடு மற்றநாடுகளை கொதித்தெழ செய்துள்ளது.