கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களிலும், இன்று திங்கட்கிழமையும் அமுலில் உள்ள ஊரடங்கு நிலை நாளை அதிகாலை 5.00 மணி முதல் தளர்த்தப்படுகின்றது.
இவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு நிலைமையானது மே முதலாம் திகதிவரை, இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டும் 9 மணி நேரம் ஒவ்வொரு நாளும் அமுலில் இருக்கும் என பொலிஸ் தலமையகம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில், பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டை விட்டு வெளியேற, அரசாங்கம் அறிவித்துள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை மையப்படுத்திய முறைமையை பயன்படுத்துமாறு பொலிஸ் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
‘ இந்த அடையாள அட்டை இலக்க முறைமை சட்டம் அல்ல. எனினும் கொரோனா பரவலை தடுக்க முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு வழி முறைகளை கையாள்வதற்கான ஒரு வழி முறை மட்டுமே.
தனது வீட்டுக்கு அருகில் உணவு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் போது, குறித்த அடையாள அட்டை இலக்கத்தை வைத்து பார்த்து, தனது திகதி இல்லை என்பதற்காக அதனை கொள்வனவு செய்யாமல் இருக்க வேண்டியதில்லை. அத்தியவசியமான தேவைகளை நிறைவேற்றலாம்.
எனினும் கூட்டம் கூட்டமாக வர்த்தக நிலையங்களில் மக்கள் குவிவதை தடுக்கவே இம்முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது.
இது சட்டமல்ல. எனினும் இது குறித்து நாம் பூரண கண்காணிப்பில் இருப்போம். ‘ என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
‘ தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், விவசாய நடவடிக்கைகள் போன்ற அரசாங்கம் ஏற்கனவே ஊரடங்கு காலத்திலும் முன்னெடுத்து செல்ல அனுமதித்த விடயங்கள் தவிற, ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் இருந்து வீட்டை விட்டு வெளியேறுவோர் கண்டிப்பாக தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்துங்கள்.
ஊரடங்கு நீக்கப்பட்டாலும் , சமூக இடைவெளி உள்ளிட்ட தொற்று நோய் தடுப்பு வழி முறைகளை பின்பற்றாதவர்களை நாளை முதல் நாம் கைது செய்ய நடவடிக்கை எடுப்போம்.
இந் நிலையில், ஊரடங்கு நாளையதினம் தளர்த்தப்படாத கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில், வழமையான ஊரடங்கு சட்ட திட்டங்கள் அமுலாகும்.
அம்மாவட்டங்களில் உள்ளோர் வீடுகளை விட்டு வெளியேற கண்டிப்பாக ஊரடங்கு அனுமதிப் பத்திரம் பெற வேண்டும்’ எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்கடடினார்.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இருப்பினும் வீட்டிலிருந்து வெளியே செல்ல, ஒவ்வொருவரினதும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை மையப்படுத்திய முறைமை கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.
இன்று திங்கட் கிழமை தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி இலக்கம் 1 அல்லது 2 இல் முடியும் நபர்களுக்கு மட்டும் அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்காக வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியளிக்கப்படும்.
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 3,4 என்பவற்றில் முடிவடையும் நபர்கள் செவ்வாயன்றும், 5,6 இல் முடிவடைவோர் புதனன்றும், 7,8 இல் முடிவடைவோர் வியாழனன்றும், 9, 0 இல் முடிவடைவோர் வெள்ளியன்றும் அத்தியவசிய பொருட் கொள்வனவுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர். என ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே இன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அது குறித்த விளக்கத்தை மேற்படி அளித்திருந்தார்.