இந்தியாவில் தாயின் இறுதிச்சடங்கிற்கு வரமுடியாமல் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே புக்கம்பட்டி அடுத்த அழகாகவுண்டனூரைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மனைவி மாது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் சக்திவேல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது சக்திவேல் ராஜஸ்தானில் ராணுவ பணியில் உள்ளார்.
கடந்த சில தினங்களாக சக்திவேலின் தாய் மாது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தாய் இறந்த செய்தியை கேட்டதும் நொறுங்கிப்போன சக்திவேல் உடனே சொந்த ஊருக்கு செல்ல முயன்றுள்ளார்.
ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் அவரால் தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.
இதனை அடுத்து அவரது உறவினர்கள் வாட்ஸ் அப் வீடியோ காலில் தாயின் இறுதிச்சடங்கை சக்திவேலுக்கு காண்பித்தனர்.
இதைப் பார்த்ததும் சக்திவேல் ‘அம்மா..அம்மா..’ என கதறி அழுதார், இதை பார்த்த அங்கு கூடியிருந்த உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பலரின் மனதையும் கலங்கடித்துள்ளது.