கொரோணா வைரஸ் சம்மந்தப்பட்ட சுகாதார அறிக்கைகளில் உரிய அக்கறையைச் செலுத்தி, அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு பொருத்தமான முடிவுகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தொடர்பாக நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள விடயங்களாவன,
01. கொடூரமான கொரோனாவின் காரணமாக தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் எடுப்பதில் சிக்கல்கள் உள்ளன என்பதனை நாம் அனைவரும் அறிவோம்.
02. இந்நிலையில், இலங்கை தொடர்பான கொரோனா வைரஸ் சம்மந்தப்பட்ட பின்வரும் அறிக்கைகள் அதிகம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை.
அ) கொரோனாவினுடைய பரவல் வேக நூற்று வீதம் பின்வருமாறு அமைகின்றது.
ஜேர்மனி 00.63%
இத்தாலி 00.88%
ஸ்பெயின் 01.23%
பிரான்ஸ் 02.31%
அமெரிக்கா 02.32%
இலங்கை 12.43%
அண்மை இரண்டொரு நாட்களில் நமது நாட்டில் ஏற்பட்ட இந்த அதிகரிப்பு அதிர்ச்சியூட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.
ஆ) இதனால் அநுராதபுரம் உட்பட புதிய பல இடங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தினர், கடற்படையினர் போன்றோரைத் தனிமைப்படுத்துதல் தொடர்பான சிக்கல்கள் பலவும் எழுந்துள்ளன. வடமாகாணத்தில் கோப்பாய், வற்றாப்பளை ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் இராணுவத்தினரைத் தனிமைப்படுத்தல் தொடர்பில் மக்கள் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றனர்.
இ) இறுதியாகக் கிடைத்த தகவலின்படி விமானப்படை வீரர் ஒருவர் கூட தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஈ) இலங்கை அரசாங்க மருத்துவ சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித்த அளுத்கே அவர்கள் இரண்டு வாரங்களுக்கு நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்படக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
உ) கடந்த 27ம் திகதி தளர்த்தப்பட இருந்த நாடு முழுமைக்குமான ஊரடங்குச் சட்டம் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் 28ம் திகதி வரை விரிவுபடுத்தப்பட்டது.
ஊ) சிறு குழந்தைகளைக் கூட கொரோனா அதிகரித்த விதத்தில் தாக்கியுள்ளதென்றும், அதன் அடையாளங்கள் ஏற்கனவே இருந்ததைவிட வித்தியாசமாக அமைந்துள்ளன என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எ) ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளைகளில் கூடியளவில் ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்றும் இதற்கு மேலதிகமாக அடையாள அட்டையின் இறுதி இலக்க அடிப்படையில் குறித்த குறித்த நாட்களில் வெளியே செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
ஏ) எல்லா சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ) ஒரு வாகனத்தில் சாரதியும் மற்றும் இருவரும் அதேவேளை, பேருந்துகளில் ஒரு ஆசனத்திற்கு ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என நெறிவுறுத்தப்பட்டுள்ளது.
03. மேற்குறித்த நிலைமைகளுக்கிடையே மே 04ம் திகதிக்கு முன்னதாக வேட்பாளர்களின் பட்டியலைக் கொண்ட அரசிதழை வெளியிடுவதற்குத் தங்கள் தேர்தல்கள் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.
04. இதனோடு சேர்த்து ஊரடங்குச் சட்ட காலங்களில் வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடக் கூடியதாக அவர்களுக்கு அனுமதியட்டைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.
05. வேட்பாளர்களின் அனுமதியட்டைகளை வேட்பாளர்கள் காவல் நிலையங்களில் பெற்றுக் கொள்வதற்கான கடிதங்கள் அனுப்பபட்டுள்ளதாக அல்லது அனுப்பப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், வேட்பாளர்களுக்கான அனுமதியட்டையை அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரூடாக வழங்குவதும், இது தொடர்பாக காவற்துறைக்கு அறிவிப்பதுமே முறையான நடவடிக்கையாகும்.
06. ஏனெனில், தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனத்தன்மை கொண்டது. தேர்தல்கள் தொடர்பான சகல பணிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நேரடியான மேற்பார்வையிலேயே இடம்பெற வேண்டும். இவ்வகையில், வேட்பாளர்களுக்கான ஊரடங்குச் சட்ட வேளையிலான அனுமதியட்டையை காவற்துறை வழங்குவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதியளித்தல் என்பது ஆணைக்குழு இது தொடர்பான தனது அதிகாரத்தைக் காவற்துறைக்குக் கையளிப்பதாகவே கொள்ள முடியும். அவ்வாறு கையளிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளதா? என்கின்ற கேள்வி எழுகின்றது.
07. மேற்குறித்த 03 தொடக்கம் 06 வரையான பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், 02ம் பந்தியில் (அ) தொடக்கம் (ஏ) வரை குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எவ்வித கரிசனையையும் காட்டாது எடுக்கப்பட்ட முடிவுகளாகவே தென்படுகின்றன.
எனவே 02ம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்களின்பால் உரிய அக்கறையைச் செலுத்தி, இவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள கட்சிச் செயலாளர்களுடனான தேர்தல்கள் ஆணைக்குழுவின் சந்திப்பின் போது பொருத்தமான முடிவுகளை ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.