கொவிட் 19 நோய் தொற்றின் காரணமாக நாடு முகம் கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்துவரும் உழைக்கும் மக்களுக்கு தனது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்துவதற்கு இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டள்ளது.
வரலாறு நெடுகிலும் நாம் முகம் கொடுத்த, வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம்.
அந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் நேரடி பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களும் முன்னிற்பவர்களும் நாட்டின் உழைக்கும் மக்களாகும்.
கடந்த காலத்தின் அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களையும் உழைக்கும் மக்களுடன் சேர்ந்து வெற்றிகொண்ட நாம் கொவிட் 19ஐயும் வெற்றிகொள்வோம் என்பது உறுதி
எதிர்பாராதவிதமாக உலகில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கு மத்தியிலும் மேதினக் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் இடம்பெறாது.
எனினும் நியாயமான உரிமைகளுக்காக செய்யப்படும் போராட்டம் பலப்படுத்தப்படவேண்டும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முழு உலகிலுமுள்ள உழைக்கும் மக்கள் இந்த முறை கொவிட்-19 தொற்றுநோய்க்கு முகங்கொடுத்தபடியே உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் மக்களின் பலம், ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலான ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் எதுவுமில்லாத நிலையிலும் எமது பலத்தினையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறை எமக்கு உள்ளது.
அது சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயற்பட்டு, தொற்றினை ஒழிப்பதற்காகப் போராடுவோருக்கு வேலை செய்யும் மக்களின் துணிச்சலையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகும்.
கொவிட்-19 தொற்றுநோய் வேலை செய்யும் மக்களின் எதிர்காலத்தில் பாதிப்புச் செலுத்தும் என்பதை மறைக்க முடியாது.
இன்று போன்றதொரு தினத்தில் அந்த சவால்கள் தொடர்பாக உழைக்கும் மக்களை விழிப்புணர்வூட்டுவது அந்த சவால்களை வெற்றிக் கொள்ள உதவியாக அமையும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
உலகளாவிய ரீதியாக வாழும் உழைக்கும் மக்கள் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள வேளை தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உழைக்கும் மக்களின் உன்னமான பணிகளுக்கு கௌரவம் மற்றும் மதிப்பளிப்பதோடு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இன்னல் நிலைகளில் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல் விடுத்துள்ளார்.