கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியதன் பின்னர், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதாயின், விசேட நேர அட்டவணை முறைமைக்கு அமைய, செயற்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, பரீட்சைகளை அடிப்படையாகக்கொண்டு 10 ஆம் தரத்திற்கு மேல் உள்ள தரங்களுக்காக மாத்திரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் சிலருடன் கடந்த தினம் இடம்பெற்ற சந்திப்பில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேநேரம், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னதாக, அனைத்து பாடசாலைகளிலும் கிருமிநீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு வழிகாட்டல் கோவை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளை மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு தாம் தயார் என அனைத்து இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.