கிளிநொச்சி – யூனியன்குளம் பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் குழுச்சண்டையாக மாறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யூனியன்குளம் பகுதியில் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கிடைக்காத நபர் ஒருவருக்கு நிவாரணம் பெற்றுக்கொண்ட பெண் தலைமத்துவ குடுபத்தினருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இவ்வாறு கைகலப்பாக மாறியது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபரின் உறவினர்களது தலைமையில் வந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞர் குழு கத்திகள், மோட்டார்சைக்கிள் செயின், இரும்புக்கம்பிகளுடன் வந்து வீட்டிலிருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கியுள்ளனர்.
அத்துடன், வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் அவர்கள் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தாக்குதல் நடாத்தியவர்கள் ஒருசிலரை அடையாளம் காட்டியும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.