பொலிவியாவின் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானக்குழு உறுப்பினர்கள் மற்றும் நான்கு ஸ்பானிஷ் குடிமக்கள் பலியாகினர் என்று நாட்டின் விமானப்படை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு நகரமான டிரினிடாட் அருகே பீச் கிராஃப்ட் பரோன் பி -55 என்ற சிறிய ரக இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.
கொரோனா வைரஸ் மத்தியில் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பவிருந்த நான்கு ஸ்பானிஷ் குடிமக்களே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயின் குடிமக்கள திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னர் டிரினிடாட் நகரத்திலிருந்து நாட்டின் பெரிய போக்குவரத்து மையமான சாண்டா குரூஸிற்கு இராணுவ விமானத்தில் கொண்டு செல்லப்படும் போது விபத்து ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பொலிவியா தனது எல்லைகளை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து விசாரிக்கவும், எட்டு நாட்களுக்குள் இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் பொலிவியா அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்துள்ளனர் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
இயந்திரம் செயலிழந்ததால் விமானம் புறப்பட்ட 12 நிமிடங்களுக்குப் பிறகு டிரினிடாட்டில் உள்ள விமான நிலையத்திற்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக விமானிகள் தெரிவித்ததாக முதற்கட்ட கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
அதற்கு பின்னர் விமானத்துடனான தொடர்பை கட்டுப்பாட்டறை இழந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.