நாடாளுமன்றத் தேர்தலை திட்டமிட்ட திகதியில் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே ஆகவேண்டும். தேர்தலைக் குழப்பியடிக்கும் வகையில் யாராவது வழக்குத் தொடுத்தால் அதற்குரிய பதிலை நீதிமன்றத்துக்கு நான் வழங்குவேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதிமன்றம் தடைவிதிக்காவிடின் திட்டமிட்டவாறு ஜூன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்திவைத்தது. தேர்தலை ஒத்திவைக்கும்போது ஜூன் மாதம் 20ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது. எனவே, நாடாளுமன்றத் தேர்தலை திட்டமிட்ட திகதியில் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே ஆகவேண்டும்.
அதற்குரிய சகல அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தையோ அல்லது பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோரும் யோசனையையோ அல்லது அரசமைப்பைக் காரணம் காட்டி வர்த்தமானி அறிவித்தல் விடயத்தையோ அல்லது வேட்புமனுத் தாக்கல் விவகாரத்தையோ காரணம் காட்டி நாடாளுமன்றத் தேர்தலைக் குழப்பியடிக்கும் வகையில் யாராவது வழக்குத் தொடுத்தால் அதற்குரிய பதிலை நீதிமன்றத்துக்கு நான் வழங்குவேன் – என்றார்.