கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களுக்கு இரண்டாவது முறையாக நோய்த்தொற்று இருப்பதாக காட்டும் சோதனை முடிவுகள் தவறானவை என உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் மரியா வான் கெர்கோவ் விளக்கமளித்துள்ளார்.
வைரஸிலிருந்து மீண்ட பிறகு மக்கள் சிலருக்கு இரண்டாவது முறையாக கொரோனா இருப்பது உறுதிசெய்யப்படுவதாக சில நாடுகளின் அறிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பிற்கான கொரோனா தொழில்நுட்ப முன்னணி மருத்துவர் மரியா வான் கெர்கோவிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இது குறித்து விளக்கமளித்த மரியா வான் கெர்கோவ், இந்த நிகழ்வுகளில் உண்மையில் நடப்பது என்னவென்றால், மக்களின் நுரையீரல் குணமடைகிறது, நுரையீரலில் உள்ள சில இறந்த செல்கள் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன,
அவை மறு தொற்று ஏற்படாத போதிலும் கொரோனா இருப்பதாக நேர்மறையான முடிவை காட்டுகின்றன என விளக்கமளித்துள்ளார்.
ஆனால், ஒருமுறை வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் இன்னும் முயற்சி செய்து வருவதாக அவர் கூறினார்.
வைரஸின் தோற்றம் குறித்து விளக்கமளித்த மரியா வான் கெர்கோவ், அது வெளவால்களிடமிருந்து இயற்கையாக தோன்றியதாக கூறினார்.
இருப்பினும் வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸை பரப்பும் இடைநிலை இனங்கள் இன்னும் அறியப்படவில்லை என குறிப்பிட்டார்.