ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்துக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வந்த மூன்று இந்தியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதற்கு, குறிப்பிட்ட சமூகத்தை குற்றஞ்சாட்டி, சமூக வலைதளங்களில் சிலர், கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்கள் சிலர், இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய துாதர் பவன் கபூர், கடந்த, 20-ஆம் திகதி டுவிட்டரில்’ வெளியிட்ட பதிவில், இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும், எந்த காரணத்துக்காகவும், யாரையும் பாகுபாடு செய்வதை விரும்பவில்லை.
சட்டத்தின் ஆட்சிக்கும், மனித நேயத்துக்கும் எதிரானது பாகுபாடு. இதை, இந்தியர்கள் நினைவில் வைத்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில், ஹோட்டல் ஒன்றில் தலைமை சமையல்காரராக பணியாற்றிய, ரவாத் ரோஹித், கடை ஒன்றில், ஸ்டோர் கீப்பராக பணியாற்றிய சச்சின் கின்னிகோலி, தனியார் நிறுவனம் ஒன்றில், காசாளராக பணியாற்றிய ஒருவர் ஆகியோர், சமூக வலைதளங்களில், இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் மூன்று பேரையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இடை நீக்கம் செய்துள்ளதுடன், அவர்களின் சம்பளத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.