சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அடிப்படை உணவுக்காக 2,500-கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரம் காத்திருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் இரண்டாவது பணக்கார நாடான சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு குடிமகனின் சராசரி நிகர மதிப்பு 191,100 பிராங்குகள் என 2019-ல் வெளியான உலகளாவிய அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், கொரோனா நெருக்கடியானது தற்போது பணக்கார சுவிட்சர்லாந்தில் உள்ள பலரும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
ஜெனீவா நகரின் ice rink முன்பு ஞாயிறன்று மாலை சுமார் 2500-கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை உணவுக்காக பல மணி நேரம் காத்திருந்துள்ளனர் என்பதை உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் அகதிகள் மற்றும் எந்த ஆவணங்களும் அற்றவர்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் என தெரியவந்துள்ளது.
உணவு வழங்கப்படுவதற்கு முன்னர் அந்த மக்களின் வரிசையானது சுமார் ஒரு கிலோமீற்றர் தாண்டியதாக கூறப்படுகிறது.
மூன்று மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து மக்கள் வாங்கிச் சென்றதாக, உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பல வாரங்களாக Caravane de Solidarité அமைப்பானது அப்பாவி மக்களுக்கு இதேபோன்று உணவு வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
ஊரடங்கு அமுலுக்கு வந்த பின்னர், இந்த மக்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிபோனதாகவும்,
கடன் வாங்கும் நிலையில் பலரும் இல்லை என்பதாலையே, இதுபோன்ற உணவு வழங்கும் பகுதிகளில் கூட்டம் காணப்படுவதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 20 பிராங்குகள் மதிப்பிலான அந்த உணவுப் பொதியால் மொத்த குடும்பமும் ஒரு வார காலம் பசியாற வேண்டும்.
தற்போது இந்த விவகாரம் அரசியல் வட்டத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.