வடகிழக்கு சிரியாவில் ஒரு பள்ளத்தாக்கைப் பயன்படுத்தி ஐ.எஸ் பயங்கரவாதிகள் சடலங்களைக் குவித்தது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2014-ல் வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு தற்போது ஆய்வாளர்கள் விசாரணையை முன்னெடுக்க உள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆட்சி நடத்திய காலகட்டத்தில் முழுவதும் 50 மீற்றர் ஆழம் கொண்ட அல்-ஹோதா பள்ளத்தாக்கில் சடலங்களை வீசுவது தொடர்ந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, உள்ளூர் அதிகாரிகள் அந்த பள்ளத்தாக்கை பாதுகாக்க வேண்டும், மனித எச்சங்களை அகற்ற வேண்டும், மற்றும் வழக்குகளுக்கான ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை வைத்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் இருந்து 20-கும் மேற்பட்ட மாபெரும் கல்லறைகளும், அதில் இருந்து ஆயிரக்கணக்கான சடலங்களும் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
அவர்களில், காணாமல் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டதாக நம்பப்படுபவர்கள், சமூக ஆர்வலர்கள், மனிதாபிமான தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஐ.எச் தீவிரவாதிகளின் பிடியில் சிக்காமல் தப்ப நினைத்த குடியிருப்பாளர்கள் உள்ளிட்டவர்களின் சடலங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் மேற்கு சிரியா முதல் கிழக்கு ஈராக் வரையான சுமார் 34,000 சதுர மைல்கள் கொண்ட நிலப்பரப்பையும், அதில் குடியிருந்த சுமார் 8 மில்லியன் மக்களையும் ஆட்சி செய்து வந்துள்ளனர்.
அவர் சடலங்களை மறைவு செய்ய பயன்படுத்திய அல்-ஹோதா பள்ளத்தாக்கானது ஒரு காலகட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்துள்ளது.
ஆனால் 2013 மற்றும் 2015 காலகட்டத்தில் குறித்த பகுதி ஐ.ஏஸ் படைகளின் கீழ் வந்ததும் அது கல்லறையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.