கொரோனா வைரஸ் பரவலால் முதன்முதலில் முழு முடக்கத்தை அமல்படுத்திய இத்தாலி கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
கொரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கு கொரோனா பாதிப்புக்கு சுமார் 2,10,000 பேர் இலக்கான நிலையில்,
28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே மார்ச் 9ஆம் திகதி நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்பின் மார்ச் 31ஆம் திகதி கொரோனா பாதிப்பு உச்சத்தை இத்தாலி அடைந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்தது.
பொது இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், முக கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்களை அனுப்பி இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டின.
இதன்விளைவாக பொதுமுடக்கம் அமலுக்கு வந்த மூன்றாவது வாரத்திலிருந்து, கொரோனா வைரஸ் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் மெல்ல மெல்ல குறைய தொடங்கின.
தொடர்ந்து படிப்படியாக பொதுமுடக்கத்தைத் தளர்த்த அந்நாட்டு பிரதமர் ஜிசப்பே கான்டே திட்டமிட்டார்.
அதன்படி, முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், 2 மாதங்களுக்கு பின்னர் மக்கள் பொது இடங்களில் நடமாட தொடங்கியுள்ளனர்.
9 வாரங்களுக்கு பின்னர் பூங்காக்கள், உணவகங்கள் திறக்கப்பட்டன. பாடசாலைகள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் ஆகியவை மே 18ஆம் திகதிக்கு பின் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தால் சிதைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தொழிற்சாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசங்களை பயன்படுத்தவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் ஜூன் மாதத்திலிருந்து முழு இயல்புநிலை திரும்பும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



















