யாழ்ப்பாணம் உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் சென்றுள்ளது.
வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், எங களைக் கட்டிவைத்ததுடன் கணவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக குடும்பப் பெண் விசாரணையில் தெரிவித்தார்.
அத்துடன் சுமார் 3 மணிநேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு கும்பல் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொள்ளையர்கள் மூவரும் 20 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களில் ஒருவன் கைகளில் கையுறை அணிந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தமது 3 பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்துவருவதாக தெரிவித்த அவர், வீட்டில் பிள்ளைகளின் நகைகளுடன் 15 பவுண் நகைகள் இருந்ததாகவும், 5 லட்சம் ரூபாய் பணமும் இருந்த நிலையில் அவை கொள்லையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் சுன்னாகம் பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.