சர்வதேச நாடுகளில் தற்போதும் தொற்றுநோய் குறித்த அச்சுறுத்தல் இருப்பதால் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகின்ற நிலையில் அவர்களுக்கு வைரஸ் தொற்றுநோய் இருப்பின் அது மீண்டும் இலங்கையில் பரவக்கூடிய சூழல் உருவாகும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.
கொவிட் -19 தொற்றுநோய் குறித்த உண்மைகளை அரசாங்கம் மூடி மறைப்பதாக ஐ.தே.கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில் அது குறித்த உண்மைத் தன்மையை வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.
அத்துடன் நாட்டில் பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும் எனக்கூறிய அவர், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை ஆரோக்கியமனதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கொவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் குறைவானதாக உள்ளது. எனினும் தொடர்ச்சியாக நாம் சில சுகாதார நடைமுறைகளை கையாள வேண்டிய தேவை எம் அனைவருக்கும் உள்ளது.
நோயாளர்கள் எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை என்பன அரசாங்கம் அறிவிக்கும் விடயம் அல்ல என குறிப்பிட்ட அவர், இது கொவிட் – 19 கட்டுபடுத்தும் மருத்துவ அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளின் மூலமாகவே இந்த தகவல்கள் வெளியிடப்படும் எனவும் கூறினார்.
இது குறித்த முக்கிய பொறுப்பு தம்மிடமே உள்ள நிலையில் நாம் இப்போதும் வரையில் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகலையே முன்னெடுப்பதுடன், இதில் பிரதானமாக இந்த நோய் எவ்வாறு யாருக்கு எந்த நேரத்தில் தோற்றுகின்றது என்பதையே கருத்தில் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நோயாளர்கள் குறித்து உண்மையை மறைத்தால் அது மீண்டும் எம்மையே பாதிக்கும் என சுட்டிக்காட்டிய அவர், இந்த நோய் தாக்கத்தில் மக்களே பிரதானமானவர்கள் என்றும் கூறினார்.
அத்துடன் சர்வதேச நாடுகளில் இன்னமும் கொவிட் -19 தொற்றுநோய் குறித்த அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக வெளிநாட்டவர் எவரும் இலங்கைக்கு வருகின்ற நிலையில் அவர்களுக்கு வைரஸ் தொற்றுநோய் இருப்பின் அது மீண்டும் இலங்கையில் பரவக்கூடிய சூழல் உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே எம்மை சுற்றி எப்போதுமே அச்றுத்தல் இருந்துகொண்டே உள்ளதுடன் அதேபோல் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் நாய், பூனை மூலமாக பரவுகின்றதாக ஒரு கருத்து இப்போது சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் சாதாரணமாக மக்கள் மத்தியில் இதன் காரணமாக அச்சமொன்றும் உருவாகியுள்ளதாகவும் குறிபிடப்பட்டுள்ளது.
மேலும் எவ்வாறு இருப்பினும் நாய், பூனை மூலமாக கொவிட் -19 வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக கண்டறியப்படவில்லை என்றும் அவ்வாறு பரவும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.