பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தாயை ஒருவர் உயிருடன் புதைத்த நிலையில், மூன்று நாட்களுக்குப்பின் அவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசய சம்பவம் ஒன்று சீனாவில் நடைபெற்றுள்ளது.
சீனாவின் Shannxi மாகாணத்தில், Zhang என்ற பெண் தனது மாமியாரை மூன்று நாட்களாக காணவில்லை என்று பொலிசில் புகாரளித்துள்ளார்.
மே 2ஆம் திகதி தனது கணவரான Ma (58), தனது மாமியாரை சக்கர நாற்காலியில் வைத்து வெளியில் அழைத்துச் சென்றதாகவும், அதற்குப் பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்றும் Zhang தெரிவித்துள்ளார்.
உடனே பொலிசார் Maவைப் பிடித்து முறைப்படி விசாரித்துள்ளனர். விசாரணையில், Ma தனது தாயை ஒரு இடத்தில் உயிருடன் புதைத்துவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் குறிப்பிட்ட இடத்துக்கு பொலிசார் விரைய, அங்கு ஒரு பெண் முனகும் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக பொலிசார் அந்த இடத்தைத் தோண்ட, அங்கு Maவின் தாயார் Wang (79) உயிருடன் இருந்திருக்கிறார்.
புதைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையிலும், உணவோ தண்ணீரோ இல்லாத நிலையிலும், Wang உயிருடன் இருந்த விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Ma கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.




















