இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசிவினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது.
இந்த ஆலையில் இருந்து இன்று அதிக அழுத்தத்துடன் வெளியேறிய ரசாயன வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது.
இந்த நிலையில் காற்றில் கலந்த ரசாயன வாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவித்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தனர்.
ரசாயன வாயுவை சுவாசித்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை உள்ளிட்ட 11 பேர் மரணம் அடைந்ததுடன் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வாயுக்கசிவு விபத்து மோசமான அனுபவம்: உயிர்பிழைத்தவரின் அதிர்ச்சிகரமான நிமிடங்கள்!
விசாகப்பட்டினம் வாயுக்கசிவு விபத்தில் உயிர்பிழைத்தவர்கள், தங்களுடைய மோசமான அனுபவத்தை அச்சத்துடன் நினைவுகூர்ந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன ஆலையில் திடீரென ஏற்பட்ட வாயுக் கசிவால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுடன் 1000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் மக்கள் அச்சத்தில் இருக்கும் சூழலில், இந்த விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது.
வாயுக்கசிவு விபத்தில் இருந்து உயிர்பிழைத்தவர்கள், தங்களுடைய மோசமான அனுபவத்தை அச்சத்துடன் நினைவுகூர்ந்துள்ளனர். கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவர் கூறுகையில், ‘நான் உயிரிழந்து விட்டதாக நினைத்தேன்.
எப்படி உயிர் பிழைத்தேன் என எனக்கே தெரியவில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அந்த நிமிடத்தில் என்ன நடந்தது என்பது கூட எங்களுக்கு புரியவில்லை.
வெளியே வந்து பார்க்கும் போது மக்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தனர். உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக நாங்கள் அனைவரும் இங்கும் அங்கும் ஓடினோம்.
மூச்சுத்திணறி நினைவிழந்து மயக்கமடைந்தோம். அதனை நினைத்துப் பார்க்கும் போதே வேதனையாக இருக்கிறது’ என அவர் கண்கலங்க கூறியுள்ளார்.
இதனிடையே, விபத்து நடந்த பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விஷ வாயுவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, ஈரத் துணியை முகத்தில் கட்டி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் மூலமாக காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஏற்கெனவே கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கியிருந்த விசாகபட்டினம் மக்களுக்கு ரசாயண வாயுகசிவு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.