நீர்கொழும்பு பெரியமுல்லை, சாந்த அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான நாயொன்று நேற்று (7-5-2020) காலை ஆறு மணியளவில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது.
பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும் , காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாந்துவின் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் ‘மெக்ஸ்’ (MAX) என்று செல்லமாக அழைக்கப்படும் நாயே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பிரிட்டோ பெர்னாந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
எனது வீட்டில் இரண்டு நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அதில் மெக்ஸ் என்று செல்லப் பெயரில் அழைக்கப்படும் நாயை அதன் இயற்கை கடன்களை நிறைவேற்றவதற்காக காலை ஆறு மணியளவில் வெளியில் செல்ல அனுமதித்தேன்.
ஜந்து நிமிட நேரத்தில் துப்பாக்கிச் சத்தம் ஒன்று கேட்டது. நான் வீதிக்கு வந்து பார்த்தபோது, எனது நாய் இரத்த காயங்களுடன் தட்டுத்தடுமாறியவாறு வருவதை அவதானித்தேன்.
எனது வீட்டின் முன்பாக வீதியில் விழுந்து பின்னர் அது இறந்து போனது. எமது வீட்டுக்கருகில் வசிக்கும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரையே நான் இதுதொடர்பாக சந்தேகிக்கின்றேன்.
அவரது வீட்டின் முன்பாகவே நாய் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. உடனடியாக இதுதொடர்பாக 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்தேன். இந்த வீதியில் யாரிடம் துப்பாக்கி உள்ளதென்பதை ஆராய வேண்டும் என்று தெரிவித்தார்.
சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்தார்.
பிரிட்டோ பெர்னாந்து சந்தேகிக்கும் பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கு முன்பாக உள்ள வீடொன்றின் மதில் துப்பாக்கி சன்னம்பட்டு சேதமடைந்துள்ளதை காணமுடிந்தது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காட்சிகளையும் பொலிஸார் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.