ருமேனிய நாட்டில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை தெரியவந்ததை அடுத்து அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்களையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு ருமேனியாவின் போடோசனியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த 44 தொழிலாளர்களே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ருமேனியா ஜேனல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உள்ளூர் தொழில் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டநிலையில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
எனினும் கொரோனா வைரஸால் தாம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் இலங்கையர்கள் பணியாற்றுவதாக அறிவிக்கவில்லை என்று ஆடைத்தொழிற்சாலை இயக்குநர் தொழில் பரிசோதகருக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் வேலைக்கு வர மறுத்ததால் அவர்களை பணியிலிருந்து நீக்கியதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை ருமேனிய மக்களுக்கு உள்ள உரிமைகள் இலங்கை தொழிலாளர்களுக்கும் உள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.