ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் யாழ். கோப்பாயில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி ஊரெழு பகுதியில் மே மாதம் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி காயப்படுத்தி வீட்டில் இருந்த பணம் நகை சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை இவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 35 வயதுடைய மல்லாகம் உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள், வாள், திருட்டுப்போன நகைகளை அடைவு வைத்ததற்கான அடைவு சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸாார் தெரிவித்துள்ளனர்.