அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் தாக்கிவிட்டு, தனது ஒரு வயதேயான பிஞ்சு குழந்தையை பள்ளத்தில் வீசி கொன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கலிபோர்னியாவின் Palm Desert பகுதியில் அமைந்துள்ள கார் பார்க்கிங் பகுதியில் இந்த கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமது கணவர் ஆடம் ஸ்லேட்டர்(49) வந்து அழைத்துச் செல்வார் என 23 வயதான ஆஷ்லே க்ரோம் காத்திருந்துள்ளார்.
அப்போது அங்கே வந்த ஸ்லேட்டர், திடீரென்று கர்ப்பிணியான ஆஷ்லேவை கத்தியால் தாக்கிவிட்டு, தமது ஒரு வயது பெண் குழந்தையுடன் காரில் விரைந்துள்ளார்.
இதனிடையே பிரதான சாலை 74-ல் ஸ்லேட்டரின் கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஒருவர், கார்யுக்குள் சிக்கியிருந்த ஸ்லேட்டரின் மகளை வெளியே எடுத்துள்ளார். ஆனால் ஸ்லேட்டர் அந்த நபரை கத்தியால் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்து குழந்தையை பறித்து அருகாமையில் இருந்த பாறைகள் மிகுந்த பள்ளத்தில் வீசியுள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்து கால்நடையாக தப்ப முயன்ற ஸ்லேட்டரை பொலிசார் தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர்.
மட்டுமின்றி இச்சம்பவங்கள் அனைத்தும் பொதுமக்கள் நேரடி சாட்சி என்பதால், பொலிசாரிடம் அவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.
வாகன விபத்தில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும், குணமடைந்த பின்னர் அவர் மீது கொலை வழக்கு பதியப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.



















