இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஊரடங்கு காரணமாக திருமண நாட்கள் தொடர்ந்து தள்ளிப்போனதால், வேதனையில் இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 17-ஆம் திகதி முதல் அமுலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதி உள்ளது.
திருமணத்திற்கு குறைந்த நபர்கள் மட்டுமே, அதுவும் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் Adilabad மாவட்டத்தின் Kannapur கிராமத்தை சேர்ந்த Pendur Ganesh (22) மற்றும் Soyam Seethabai (20) தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த மாதம் திருமணத்திற்கான திகதி குறிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்ததால், இரு வீட்டாரும் திருமணத்தை ஒத்தி வைக்க முடிவு செய்தனர். ஆனால் இருவரும் காதலித்து பெற்றோரை கட்டாயப்படுத்தி, இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிப்போனதால், அவர்களின் திருமணம் நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மிகுந்த வேதனையில் இருந்த ஜோடி, அங்கிருக்கும் வயல் வெளியில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மரண வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 22-ஆம் திகதி முதல் தெலுங்கானாவில் ஊரடங்கு அமுலில் உள்ளதால், ஆயிரக்கணக்கான திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.