கொரோனாவால் ஆயிரக்கணக்கானோர் பலியாக காரணம், டிரம்ப் நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலே என முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இல்லமான ஓவல் மாளிகையில் தற்போது பணியாற்றுபவர்கள் நாட்டை கலவர பூமியாக மாற்றும் முனைப்புடனே செயல்படுகிறார் என்றும் ஒபாமா குற்றஞ்சாட்டியுள்ளார்.
திறமையற்ற ஒரு ஆட்சியாளரின் கீழ் நாடு சவக்காடாக மாறுவதாகவும் ஒபாமா வேதனை தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி சுயநலத்துடனும், பழமைவாதியாகவும், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கிலும், மற்றவர்களை எதிரியாகவே பாவிப்பதும் என தற்போதைய அரசாங்கத்தின் போக்கு மொத்த அமெரிக்காவையும் தற்போது பாதித்துள்ளது என ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக நாடுகள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் தற்போதைய நிர்வாகம் மறந்து செயல்படுகிறது என்றார்.
இழப்புகளை துச்சமாக கருதும் மனப்போக்கு காரணமாகவே அமெரிக்கா தற்போது பேரிழப்பை சந்தித்து வருவதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிர்வாகம் நாட்டிற்கு பயனற்றதாக கருதுவதாலையே, தாம் ஜோ பிடனை ஆதரித்து கடுமையான பரப்புரையில் களம் காண இருப்பதாகவும், தயாராவதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
டிரம்ப் அரசாங்கத்திற்கு கொரோனாவை எதிர்கொள்வது தொடர்பில் உறுதியான திட்டம் ஏதும் இல்லை என கடந்த மாதம் ஒபாமா மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் இந்த ஆண்டில், கொரோனாவுக்கு இதுவரை 1.3 மில்லியன் அமெரிக்கர்கள் இலக்காகியுள்ளதுடன், இதுவரை 80,000 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.