அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களில் மூன்றாவது நபராக இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மூத்த ஆலோசகராக அவரது மகள் இவாங்கா உள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த 2 மாதமாக இவாங்கா வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்.
அதனால் அவரது நேர்முக உதவியாளர் பல வாரங்களாக இவாங்காவை சந்திக்கவில்லை. அத்துடன் இவாங்காவிற்கு கொரோனா அறிகுறி எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.
இவாங்காவிற்கும் அவரது கணவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென உறுதிசெய்யப்பட்டது.
இதேவேளை, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் ஊடக செயலாளர் கேட்டி மில்லருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று இவாங்காவின் உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.