இலங்கையில் கொரோனா வைரஸின் அபாய நிலைக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
அதற்காகத்தான் எதிர்வரும் 11ஆம் திகதி முழு மாவட்டங்களையும் அவர் திறந்து விடுகின்றார். எனவே, பொதுத்தேர்தல் நடத்தும் ஆசையில் கொரோனாவுக்கு நாட்டு மக்களை இரையாக்க வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைத்து பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், அந்தக் கோரிக்கையை அடியோடு நிராகரித்த ஜனாதிபதி, தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் விடாப்பிடியாக நிற்கின்றார். ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டால் தேர்தல் ஆணைக்குழுவும் ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு எதிராக பல தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் அடுத்த வாரம் நீதி கிடைக்கும் என நாம் நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.