தென் கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் நாட்டின் தலைநகரில் உள்ள பார்கள் மற்றும் கிளப்புகளை மீண்டும் மூட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 34 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கை இதுவாகும், இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,874 ஆக அதிகரித்துள்ளது.
அதன் ஆரம்ப நோய் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தென் கொரியா விரைவாக செயல்பட்டது, மேலும் அதன் கடுமையான கட்டுப்பாட்டு உத்தியின் காரணமாக வெற்றி கண்டதாக கருதப்பட்டது.
ஆனால் சனிக்கிழமை, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட ஒரு நாளுக்கு பின்னர் தலைநகர் சியோல் ஆளுநர், பிராந்தியத்தில் உள்ள பார்கள் மற்றும் கிளப்புகளை உடனடியாக மூட உத்தரவிட்டார்.
மீண்டும் தொற்று தீவிரமாக பரவும் என்ற பயத்தில் சியோல் ஆளுநர் இவ்வாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் சியோலின் பிரபலமான இட்டாவோன் மாவட்டத்தில் உள்ள இரவு கிளப்பிற்கு சென்ற கொரோனா பாதிப்புடைய 29 வயது நபரால் புதிய வழக்குகள் அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த நபர் சென்ற பகுதிகளிலிருந்த கிட்டதட்ட 1,510 பேரை கண்டறியும் பணயில் சுகாதார அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை, தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் புதிய தொற்றுநோய்கள் உறுதிப்படுத்தும் கட்டத்தில் கூட, இதேபோன்ற சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எழக்கூடும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன என்றார்.
தென் கொரிய கொரோனாவுக்கு எதிரான தனது பாதுகாப்பை குறைக்கக் கூடாது, அது அழியும் வரை இந்த பிரச்சினை முடிவடையாது என குறிப்பிட்டுள்ளார்.