தமிழகத்தில் திருமணமாகி 60 நாட்கள் கூட ஆகாத புதுமாப்பிள்ளை மனைவியின் கண்முன்னே குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து அப்பகுதி இளைஞர் அபிமன்யு கூறுகையில், நேற்று மாலை பொட்டிபுரம் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 10 பேர் தொப்பளான் காட்டு வனப்பகுதியில் மது அருந்தி விட்டு அங்குள்ள பட்டியலின மக்களை அடித்து அவர்களிடம் தகராறு செய்து விட்டு வந்திருக்கிறார்கள்.
அவர்களைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பிடித்தோம். இருவரை மட்டும் பிடித்து ஊருக்குள் உள்ள மாரியம்மன் கோயிலில் உட்கார வச்சிட்டு பொலிசுக்கு தகவல் கொடுத்தோம்.
தப்பித்துப் போனவர்கள் அவுங்க ஊர்க்காரர்களிடம் சொல்லி உருட்டுக்கட்டை, கத்தியோடு பா.ம.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் எங்கள் ஊருக்கு வந்தார்கள்.
அப்போது சில வீடுகளின் மீது கற்களை வீசினார்கள், அங்கிருந்த விஷ்ணுபிரியன் என்பவரின் வீட்டிலும் கற்கள் விழுந்துள்ளது.
சத்தம் கேட்டு விஷ்ணுபிரியனின் அம்மாவும், அவரின் தம்பி நவீனும் வெளியே வந்திருக்கிறார்கள். நவீனைப் பிடித்து தலை, கை, கால்களில் கத்தியால் குத்தி இருக்கிறார்கள். அம்மாவின் சத்தத்தைக் கேட்டு விஷ்ணுபிரியன் சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டே வெளியே வந்திருக்கிறார்.
தம்பியை அடிப்பதைப் பார்த்துப் பதறிப் போன விஷ்ணுபிரியன், தடுத்து வீட்டின் கேட்டை பூட்டுப் போட முயன்றுள்ளார். அப்போது அவரை வெளியே இழுத்து மனைவி, பெற்றோர் கண்முன்னே குத்திக் கொலை செய்தார்கள் என கூறினார்கள்
விஷ்ணுபிரியனின் பெரியப்பா சேட்டு கூறுகையில், விஷ்ணுபிரியன் சென்னையில் வேலை பார்க்கிறார். திருமணமாகி 60 நாள்கள் கூட ஆகவில்லை. கொரோனா ஊரடங்கிற்காக இங்கு வந்திருந்தான். அவனை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் என கூறியுள்ளார்.