கொழும்பு குணசிங்கபுர பேருந்து நிலைய பகுதியிலிருந்து முல்லைத்தீவு கேப்பாப்புலவு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள யாசகர்கள் 60 பேரை போதைப்பொருள் பாவனையாளர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்ப நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை பெற்று இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு விதிக்கப்பட்ட பின்னர், குணசிங்கபுர பேருந்து நிலைய பகுதியில் தங்கியிருந்த யாசகர்கள் சுலபமாக அடையாளம் காணப்பட்டனர்.
அவர்கள் கொரொனா காவிகளாக மாறிவிடும் அபாயமிருந்ததால் அவர்கள் அனைவரும் முல்லைத்தீவு, கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து வரப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இதில் இருவர் அண்மையில் உயிரிழந்திருந்தனர்.
இவர்களில் பலர் போதைப்பொருள் பாவனையாளர்கள். தனிமைப்படுத்தல் மையத்தில் அடையாளம் காணப்பட்ட 60 போதைப்பொருள் பாவனையாளர்கள், வெலிக்கந்தையிலுள்ள போதைப்பொருள் பாவனையாளர்களிற்கான தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்படவுள்ளனர்.