நுவரெலியா, டயகம பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து, விற்பனையில் ஈடுபட்ட மூவர் டயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதன்படி டயகம கிழக்கு தோட்டப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் சட்டவிரோதமாக பாரியளவில் கசிப்பு உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்துவந்த ஒருவர் நேற்றிரவு (9) மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
அத்துடன் இச்சுற்றிவளைப்பின்போது 7,500 மில்லிலீற்றர் கசிப்பு, ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மூடப்பட்டிருந்த விடுதிக்குள் நூதன முறையில் கசிப்பு உற்பத்திசெய்து, ஒரு போத்தல் 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன், டயகம முதலாம் பிரிவு தோட்டத்தில் இன்று மதியம் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். ஒரு லட்சத்து 20 ஆயிரம் மில்லிலீற்றர் கோடாவும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் தோட்டத்தொழிலாளர்களை இலக்குவைத்தே இத்தகைய கள்ளச்சாராய உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் பெருந்தோட்டப்பகுதிகளில் இது சம்பந்தமாக பல கைதுகள் இடம்பெற்றுள்ளன.
டயகமவில் கைது செய்யப்பட்ட மூவரும் நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என டயகம பொலிஸார் தெரிவித்தனர்.