கொரோனா வைரஸ் அபாயம் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதை சீனாவின் வேண்டுகோளுக்கு இணங்க உலக சுகாதார அமைப்பு தாமதப்படுத்தியதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனிப்பட்ட முறையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோமுடன் கடந்த ஜனவரி மாதம் கலந்தாலோசித்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஜனவரி 21 ஆம் திகதி ஷி ஜின்பிங் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும், கொரோனா அபாயம் தொடர்பில், குறிப்பாக மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவும் உள்ளிட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகள் சுமார் 4 முதல் 6 வாரங்கள் பின்தங்கியது என தெரியவந்துள்ளது.
ஆனால் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்த குற்றச்சாட்டுகளை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளதுடன், ஆதாரமற்ற பிதற்றல் என குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொடர்பில் டெட்ரோஸ் மற்றும் ஜனாதிபதி ஷி ஜின்பிங் இருவரும் ஜனவரி 21 ஆம் திகதி தொலைபேசியில் உரையாடுவதாக கூறுவதே உண்மைக்கு புறம்பான தகவல் என குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு,
இதுபோன்ற இட்டுக்கட்டும் கதைகள், கொரோனாவுக்கு எதிரான போராட்டங்களை மழுங்கடிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
சீனா கொரோனாவின் அபாயம் தொடர்பில் தங்களுடன் ஜனவரி 20 ஆம் திகதி தகவல் பரிமாறியதாகவும்,
உரிய ஆய்வுக்கு பின்னர் ஜனவரி 22 ஆம் திகதி தாங்கள் கொரோனா தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவுக்கும் உலக சுகாதார அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி வரிசையாக குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில்,
ஜேர்மனியில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று, அரசாங்க உளவு அமைப்புகளின் தரவுகள் அடிப்படையில் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.