மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை காலை முதல் தளர்த்தப்படவுள்ள நிலையிலே குறித்த தொற்று நீக்கும் செயற்பாடு இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையினால் மட்டக்களப்பு பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் இந்த தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அலுவலகங்கள், பிரதான பேருந்து நிலையம், வர்த்தக நிலையங்கள் என்பன தொற்று நீக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பணியில் மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி, மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார குழு தலைவர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.