கொரோனா அனர்த்த காலப்பகுதியில் நாம் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை நினைவுபடுத்தி நாளை முதல் செயல்பட வேண்டும். இது கொரோனா தொற்றை தடுப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு முக்கியமானதாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
வழமையான நடவடிக்கைகளை முன்னெடுபப்பதற்கான முயற்சி நாளை இடம்பெறுவதன் மூலம் கொரோனா தொற்று நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது என்பது அர்த்தமல்ல . இதற்கு நீண்டகாலம் செல்லும் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார். கொரோனா வைரசு தொற்று நோயாளர்கள் பதிவாகினால் அதற்கான நடவடிக்கை சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இருமல் போன்றவை காணப்படுமாயின் அது தொடர்பில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு உடனடியாக பிரவேசிக்க வேண்டும் அல்லது உடனடி தொலைபேசி இலக்கங்களான 1390 அல்லது 1399 ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். கொரோனா வைரசு ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டில் வழமை நிலைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதினால் கொரோனா வைரஸ் தொற்று தணிந்து விட்டது என்று நினைப்பது தவறானது. இன்னும் பல காலம் இதற்கு செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாளை முதல் குறிப்பிட்ட வரையறுக்கு உட்பட்டதாக அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்கள் , போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் பொதுவான அறிவுறுத்தலுக்கு அமைவாக செயல்படுவது மிக முக்கியமாகும். இந்த பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் கடந்த காலங்களில் வழிகாட்டிகள் அடங்கிய ஆவணங்கள் மூலம் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.