முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் இன்றையதினம் காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது நிலத்தில் புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது.
குறித்த பெட்டி பச்சை நிறப்பெட்டியாக காணப்பட்டதால் இது தொடர்பில் நிலத்தின் உரிமையாளர் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த பெட்டியினை எடுத்து பார்த்தபோது விடுதலைப்புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சில காணப்பட்டுள்ளன.
இதன்போது விடுதலைப்புலிகளின் நான்கு சீருடைகளும் அவற்றுக்கான தொப்பிகளுடன் பெண்போராளிகள் பயன்படுத்தும் இடுப்பு பட்டி மற்றும் சிவில் உடைகள் சிலவற்றுடன் ஒளிப்பட கொப்பி, ஒலிபதிவு கெசட் ஒன்று, நான்கு அல்பங்கள் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
இவை போர் நடைபெற்ற காலத்தின்போது விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
பொலிசாரால் மீட்கப்பட்ட அனைத்து பொருட்களும் நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.