விழுப்புரம் சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில், கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் சிறுமதுரை காலணியை சேர்ந்த ஜெயபால், ராஜி தம்பதியர் மகள் ஜெயஸ்ரீ. இவர், நேற்று கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்து எரிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் இவரின் வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், முருகன் மற்றும் கலியபெருமாள் அளித்த வாக்குமூலமாக காவல்துறை தரப்பில் கூறப்படுவது, “ஜெயபால் குடும்பத்துக்கும், எங்களுக்கும் 7 வருஷமா பிரச்சனை இருந்துவந்தது. அதனால் எங்களுக்கும் அவர்களுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். நாங்கள் அரசியலில் உள்ளோம் என்று தெரிந்தும் அவர்கள், எங்களை பார்த்து பயப்படவே இல்லை. ஜெயபால் இரண்டு பெட்டிக்கடைகளை வச்சு சம்பாதிக்கிறதால திமிர்னு எங்களுக்கும் தோணும்.
இந்நிலையில்தான் முருகன் நிலத்துக்கு பக்கத்துல இருக்குற ஒரு ஏக்கர் நிலத்தை ஜெயபால் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து சம்பாதிக்க ஆரம்பிசார். அதனால் அவர்மேல எங்களுக்கு இன்னும் கோபம் அதிகமாச்சி. அந்தப் பிரச்சனைலதான் நாலு மாசத்துக்கு முன்னாடி எங்களுக்குள்ள தகராறு ஏற்பட்டது.
அப்போ ஜெயபாலையும், அவரு பொண்டாட்டி ராஜியையும் நான் அடிச்சேன். அடிக்கடி எங்களுக்குள்ள வர்ற பிரச்சனைக்கெல்லாம் பொலிஸ்கிட்ட போய் புகார் கொடுப்பாரு. எங்களுக்குள்ள எப்ப பிரச்சனை வந்தாலும் ஜெயபாலோட பெரிய பொண்ணு ஜெயஸ்ரீ எங்களை திட்டும். அதனால எங்களுக்கு அந்தப் பொண்ணு மேலயும் கோபம் அதிகமாச்சு.
இரண்டு நாளைக்கு முன் அவர்கள் கடையில் நடந்த சண்டைக்கு நாங்கள் தான் காரணம் என்று பொலிஸில் புகார் கொடுக்க போனார்கள். அந்நேரம் பார்த்து ஜெயபால் வீட்டுக்கு சென்று பெட்டிக்கடையில் இருந்த ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வைத்து அழுத்தி வீட்டுக்குள் இழுத்துச் சென்றோம். அங்கு கை மற்றும் காலை துணியால் கட்டி மண்ணெண்ணெயை ஊற்றி உயிரோடு கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பினோம்” என்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளனர்.