கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ‘ தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலை’ சட்ட பூர்வமானதே என பொலிஸார் அறிவித்தனர்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை, பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன , சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன ஆகியோர் இணைந்து விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி இதனை தெளிவுபடுத்தினர்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கையில்,
உண்மையில் நாம் இப்போது ஒரு தீர்மானமிக்க ஒரு கட்டத்தில் இருக்கின்றோம். சுமார் 60 நாட்கள் முடங்கியிருந்து, மக்கள் வழமைக்கு திரும்பி வருகின்றனர்.
கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலேயே, தனியார், அரச நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலைமை நாட்டில் மீண்டும் கொரோனா கொத்தனியொன்றினை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் நாம் மிக கவனமாக இருத்தல் வேண்டும்.
கொழும்பு , கம்பஹாவில் ஊரடங்கு நிலை உள்ள நிலையில் அதனை மீறி செயற்பட்டால் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்.
அதேபோல் , ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தொற்று நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை எவரேனு மீறினால், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.
இந்த தனிமைபப்படுத்தல் ஊரடங்கை அமுல் செய்ததனாலேயே, இன்று உலகவில் 13, 14 வீதமாக பதிவாகும் மரணங்கள் எமது நாட்டில் குறைந்த வீதத்தில் உள்ளது.
தற்போது பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கின் போது நாம் கையாண்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிகை அலங்கார நிலையங்கள், அழகுக்கலை நிலையங்கள் போன்றன இயங்குவதானால் தொடர்ந்தும் உரிய சுகாதார பரிசோதகர்களின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும்.
வாராந்த, நாளாந்த சந்தைகள் மக்கள் ஒன்று திறளும் அத்தனை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளிலும் , கொழும்பு கம்பஹாவிலும் அரச , தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் இயங்க அரம்பித்துள்ளன. அதன்படி அவர்கள் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள உரிய ஆலோசனைகளை பின்பற்றுகின்றார்களா, தனிமைப்படுத்தல், நோய் தடுப்பு சட்ட விதிவிதனக்களை கையாளுகிறார்களா என நாளை முதல் நாம் சோதனைச் செய்யவுள்ளோம்.
இதற்காக உளவுத் துறையினர், சுகாதார பரிசோதகர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள உள்ளோம். மீள தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களில் உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாதுவிடத்து, தனிமைப்படுத்தல், நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த நிறுவனங்கள், நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சட்ட மா அதிபர் அங்கீகரித்துள்ள நிலையில் எமது நடவடிக்கைகள் தொடரும்.’ என தெரிவித்தார்.
இதனையடுத்து பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர, கம்பஹா நீதிமன்றின் உத்தரவினை முன்வைத்து , தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமை சட்டபூர்வமானது என விளக்கினார்.